ராமநாதபுரம்:ராமநாதபுரம் பல்வேறு வகையான பண்பாடுகள், நினைவுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொல்லியல் தளங்கள் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு மாவட்டம் ஆகும். இங்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், பாம்பன் ரயில் பாலம், அரேபியத் தொடர்பினால் சிறப்புப் பெற்ற ஏர்வாடி, தேவாரப் பாடப்பெற்ற திருவாடானை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல இடங்கள் உள்ளன.
அந்த வரிசையில் சேதுபதி மன்னர் காலத்தில் திருப்புல்லாணியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்று, தற்போது அதன் பொலிவை இழந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை பாதுகாக்கவேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தமிழ்நாடு அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் வே.ராஜகுரு கூறியதாவது, "டச்சுக்காரர்கள் கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று பணியைத் துவங்கினர். ஆனால் நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்தபோது இருவருக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்டடலாம் என முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இதன்பின்னர் இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-இல் செய்து கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்.
ஆயுதக் கிடங்கு:ஆங்கிலேயர்கள் கி.பி.1772-இல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.