தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனிமேல் பள்ளிகளிலும் ஆதார் பதிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி! - Aadhaar registration

Department of School Education: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஆதார் பதிவு செய்தல், திருத்தம் செய்தல் போன்றவை பள்ளிகளிலேயே மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் பள்ளிகளிலும் ஆதார் பதிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
இனிமேல் பள்ளிகளிலும் ஆதார் பதிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 7:18 PM IST

சென்னை: இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதார் எண்) பெறுவதற்கு தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அஞ்சல் நிலையம், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள இசேவை மையத்திற்குச் சென்று பெற வேண்டிய நிலை உள்ளது.

இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையினை மாற்றிட பள்ளிகளிலேயே அதற்கான வசதிகளை ஏற்படுத்தப் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் மையங்களை உருவாக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடை நிற்றலின்றித் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும். பயனாளர்களுக்குக் குறித்த நேரத்தில் முறையாகச் சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடிப் பயனாளர் பரிமாற்றம் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஒவ்வாெரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்குப் புதிதாக ஒரு வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிவிடுவது அவசியமாகும்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 1 முதல் 12 வகுப்பு வரை சுமார் 1.25 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் ஆதார் அடையாள அட்டையில்லாத மாணவர்களுக்குப் புதிய பதிவினைச் செய்யும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினைக் கருத்தில் கொண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 17 லட்சம் மாணவருக்குக் கட்டாயப் புதுப்பித்தல் பணி மேற்கொள்வதைக் கருத்தில் கொண்டும், இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) பதிவாளராக பதிவு பெற்றுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பள்ளிகளில் ஆதார் பதிவினை மாணவர்களின் வயதின் அடிப்படையில் 4 நிலைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பள்ளிகளில் ஆதார் பதிவு நிலைகள்:இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் குழந்தை பதிவு சேர்க்கை கொள்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் பண்புக் கூறுகள் அதாவது, கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை.

பெற்றோரின் ஆதார் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வகை புதிய பதிவுகளைத் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். இவ்வகை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்விதக் கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இவ்வகை புதுப்பித்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் இப்புதப்பித்தலின் போது பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைபேசி போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்விதக் கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்: குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு 5 முதல் 7 வயது வரை பதிவு செய்யாமலுள்ள 7- வயதிற்கு மேற்பட்ட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர், முகவரி அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்விதக் கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்குப் புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் செய்ய உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புதுக்கோட்டை அருகே ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details