நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.30 மணி வரை 1029 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பந்தலூர் பகுதியில் 278.80 மிமீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனிடையே கூடலூர், தேவாலா உப்பட்டி டவர் அருகில் ஏற்பட்ட மண்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. உடனே நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மண் சரிவின் போது காரில் பயணம் செய்த மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மண்சரிவால் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு பாதிப்பு அடைந்த பகுதிகளை சீரமைத்து வருகின்றனர். இதனிடையே, ஆற்றுப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பந்தலூர் நகராட்சி செம்மண் வயல் பகுதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் நெல்லியாளம் நகராட்சி ஆணையர் முனியப்பன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், கூடலூர் வட்ட வளர்ச்சி அலுவலர் சலீம், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.