சென்னை:சென்னை, சூளை கண்ணப்பர் திடலில் கடந்த 22 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி, மழைக்கால பேரிடர், விஷப்பூச்சி தொல்லைகளால் கடும் இன்னல்களை சந்தித்து வந்த 114 குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 58-வது வார்டுக்கு உட்பட்ட சூளை, கண்ணப்பர் திடலில் பல ஆண்டுகளாக ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இடத்துக்கு 'வீடற்றோருக்கான காப்பகம்' (Home for homeless) என்ற பெயரும் உள்ளது. இவர்கள் முதலில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை அருகே சாலையோரம் பல தலைமுறைகளாக குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த 1995ம் ஆண்டில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அப்பகுதியில் இவர்கள் இடையூறாக இருப்பதாகவும், மூன்று மாதங்களில் அரசு சார்பில் வீடு வழங்குவதாகவும் அப்போதைய அரசு உறுதி அளித்து, இவர்களை அங்கிருந்து வெளியேற்றி சென்னை சூளை சந்திப்பு பகுதியில் கண்ணப்பர் திடலில் தங்க வைத்தனர். இதேபோல் கடந்த 2002ம் ஆண்டிலும் பல குடும்பத்தினர் கண்ணப்பர் திடல் பகுதியில் மறுகுடியமர்த்தப்பட்டனர்.
இதையும் படிங்க: தார்ப்பாய் தான் வீடு.. சொந்த ஊரிலே அகதியான பூர்வகுடிகள்.. விடிவுகாலம் எப்போது?
இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுக்கு அரசு உறுதியளித்தபடி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் பாதிப்புகளுக்குள்ளாகி மண்டபங்கள், அரசு ஏற்படுத்தும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். மேலும், உரிய அடிப்படை வசதிகளின்றி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி வந்தனர்.
தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சியினர், வீடுகள் வழங்குவதாக வாக்குறுதிகளை அளித்தாலும் உண்மையில் எவ்வித தீர்வும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து வந்தனர். இது குறித்து கண்ணப்பர் திடல் பெண்கள் சிலர் கூறுகையில், "இந்த இடத்தில் சுமார் 120 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான குளியலறை, கழிப்பறை என எதுவுமே இல்லை.
'பிள்ளைகளாவது நன்றாக வாழ வேண்டும்':
பொது கழிப்பிடத்தை தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சொல்லப் போனால், சமையலறை என்பதே இங்கு இல்லை. ஐந்து, ஆறு குடும்பங்களுக்கு ஒரே ஒரு சமையலறை தான். மேலும், இங்கு வசிக்கும் எல்லோருக்கும் தனித்தனி வீடு கிடையாது. பெரிய கூடாரத்தில் தார்ப்பாய் போட்டு, அட்டைகளை கொண்டு அடைத்து எல்லோரும் தனித்தனி குடும்பங்களாக வாழ்ந்து வருகிறோம்.
நாங்கள் சிறு சிறு வேலைகள் பார்த்தும், நடைபாதைக் கடைகள் வைத்தும் பிழைப்பு நடத்தி வருகிறோம். வயது வந்த பெண்கள் இருக்கின்றனர். அவர்களும் பொதுக்கழிப்பிடத்தைத் தான் பயன்படுத்திகிறார்கள். அவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: கண்ணப்பர் திடல் மக்களின் 22 ஆண்டுகால கனவை நனவாக்கிய தமிழக அரசு! பயனாளிகள் நெகிழ்ச்சி
குறிப்பாக மாதவிடாய் காலங்களில் படும் கஷ்டத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் படாதபாடு படுகிறோம். விஷ பூச்சிகள் தொல்லை வேறு. இதற்கு தீர்வே கிடைக்கவில்லை. எங்கள் காலத்திற்கு பிறகாவது எங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும்" என தங்களின் துயரங்களை கொட்டித் தீர்த்தனர்.
'மகிழ்ச்சியாக உள்ளது':
இந்நிலையில், கண்ணப்பர் திடலில் வீடற்றோர் காப்பகத்தில் வசித்த 114 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ், புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். வீடு ஒதுக்கீட்டு ஆணை பெற்ற ஜெயந்தி என்பவர் 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் படும் கஷ்டங்களை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எங்கள் கஷ்டங்களுக்கு தற்போது தீர்வு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
1995ல் நடந்த ஒரு தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக இடம்மாற்றப்பட்ட இம்மக்களின் கால்நூற்றாண்டு தவிப்புக்கு தற்போதைய தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. எனினும் கண்ணப்பர் திடலில் வசிக்கும் மேலும் சிலருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறி, அப்பகுதியில் போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.