சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ஆகஸ்ட் 3ஆம் தொடங்கியது. இந்த பணிகள் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைக் கருத்தில் கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள், கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகளை கூடுதலாக மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
இருப்பினும் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை) தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காலை முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.