சென்னை:தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில், நாளை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும் என செய்தியாளரைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்தவர், தமிழகத்தில் வெப்பம் எவ்வளவு நாள் தொடரும், கோடை மழை குறித்து தெரிவித்துள்ளார்.
கேள்வி: கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, அதன் காரணம் என்ன? மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களும் கோடை காலங்கள். இந்த காலக்கட்டத்தில் பொதுவாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும், இது எல்-நீனோ (El-Nino) இருக்கக்கூடிய காலகட்டம். அதைத் தவிர்த்து, ஆங்காங்கே ஏற்படும் மாற்றத்தால் லோக்கல் எஃப்க்ட் (Local effect) ஏற்படும். வட மேற்கு மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. மே 6ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான வாய்ப்புகள் உள்ளது.
உள் மாவட்டங்களைப் போல மலை மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன?குறிப்பாக, வெப்ப நிலையைப் பொறுத்தவரையில், ஒரு காரணத்தை வைத்து சொல்ல முடியாது. லோக்கல் எஃப்க்ட் மற்றும் லார்ஜர் எஃப்க்ட் இரண்டும் இருக்க வேண்டும். மலைப்பகுதியைப் பொறுத்தவரையில், 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மலைப்பகுதி இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் பூமியில் விழுந்து செல்கிறது.