சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் வரண்ட வானிலை நிலவுவதால், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் என மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.9 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரை மற்றும் ஈரோட்டில் 40.6 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 40.5 செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.3 செல்சியஸ் பதிவாகி உள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும், நாளை (ஏப்ரல் 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.