சென்னை : உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் உறுப்பு தான கொடையாளர்களின் குடும்பத்திற்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தேந்திரன் என்ற மாணவரின் உடல் உறுப்பை தானமாக அளித்தார். அதற்கு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தம்பதியை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1,998 பேர் மூளைச்சாவு அடைந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் முக்கிய உடல் உறுப்பு தானம் 7,207 என்ற நிலையில் உள்ளது. உடல் உறுப்பு கொடையாளர்கள் மூலம் 892 இதயம், நுரையீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீரகம் 3,544, கணையம் 42, சிறுகுடல் 15 , வயிறு ஒன்று, கைகள் 7 என 7,207 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) கடந்த 12 மாதங்களில் 258 உயிரிழந்தவர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். உறுப்பு தானம் செய்த 258 பேரது குடும்பத்தினரை மருத்துவத்துறை சார்பில் கௌரவிக்கப்படுகிறது. 48 அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு கமிட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி, ராஜீவ்காந்தியை தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க :மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை! - Dharmapuri organ donation
இந்நிகழ்ச்சியில் 272 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. 1471 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பலனடைந்துள்ளனர். 7106 பேர் சிறுநீரகம் வேண்டி காத்திருக்கிறார்கள். 14,300 பேர் இணையத்தில் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.
ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. உடல் உறுப்பு வேண்டி 7,790 பேர் காத்திருக்கின்றனர். விடியல் எனும் தானியங்கி பதிவு செயலி தொடங்கப்பட்டுள்ளது. தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம்.
கொடையாக பெறப்பட்ட உறுப்புகளை சரியான முறையில் சிகிச்சை அளித்து மற்றோர் உயிர் காப்பாற்றப்படுகிறது. மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனையிலும் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் தனது உறுப்பை தானமாக தர பதிவு செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பாம்பு கடிக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருந்ததா என்பதை அவரே ஆய்வு செய்யட்டும். மருந்து தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவுகிறது என எதிர்க்கட்சி தலைவர் போற போக்கில் குறை சொல்லக்கூடாது. நாய்கடிக்கும் மருந்து அளிக்கப்படுகிறது.
அனைத்து மருத்துவமனைகளிலும் எதிர்க்கட்சி தலைவரே சென்று ஆய்வு மேற்கொள்ளட்டும். டெங்கு தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கடந்த 2012ல் 66 பேர் இறந்தனர். இந்த வருடம் 5 இறப்புகள் உள்ளன. இந்த இறப்புகளும் மருத்துவமனைக்கு வராமல் காலம் தாழ்த்தியால் ஏற்பட்டதால் தான். டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.