சென்னை: சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கும் முன்னதாக, பருவமழை காரணங்களால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின்போதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஆண்டை பொருத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவிலான நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு: 2017 பொறுத்தவரை தமிழ்நாட்டின் அதிகமாக டெங்கு பாதிப்பு என்கின்ற வகையில் 23 ஆயிரத்து 294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 65 பேர் மரணம் அடைந்தார்கள். அதேபோல் 2012 ஆம் ஆண்டில் 66 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது. அந்த வகையில் தொடர்ந்து 60, 70 பேர் உயிரிழப்பு இருந்து வந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்கள், ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற காரணத்தினால் டெங்கு பாதிப்பினால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்து வருகிறது.
தமிழகத்தில் பரவி வரும் மழைக்கால நோய்கள்:தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் டெங்கு, உன்னி காய்ச்சல், எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை மற்றும் இன்புளூயன்சா (influenza) காய்ச்சல் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படும் பணிகளை மக்கள் நல்வாழ்வு துறையும் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு:சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை துறை மேற்கொண்டு வருகிறது. கடலூர், சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உன்னி காய்ச்சல் கண்டறியப்பட்டு இருக்கிறது. எலி காய்ச்சலை பொருத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூரில் எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.