சென்னை:சென்னை எழும்பூரில் 'பாதம் பாதுகாப்போம்' திட்டம், நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிவதற்கான பயிற்றுநர் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, பயிற்சி கையட்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,"இந்த நாள் மக்கள் நல்வாழ்வு துறையின் மிக முக்கியமான நாள். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வகையில் சிறப்புமிக்க திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உலக அளவில் புகழ்பெற்று சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது 'மக்களை தேடி மருத்துவம் திட்டம்'. உலகிற்கே வழிகாட்டி திட்டமாக 'இன்னுயிர் காப்போம் திட்டம்' உள்ளது.
'இதயம் காப்போம் திட்டம்' எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய திட்டமாக உள்ளது. பத்தாண்டுகள் செயல்படாமல் இருந்த 'வரும்முன் காப்போம்' திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு துவக்கப்பட்ட மருத்துவத்துறையில் மிக முக்கியமான திட்டமாக உள்ளது. சிறுநீரக பாதுகாப்புத் திட்டம் இந்தியா முழுக்க வியந்து பார்க்கக்கூடிய திட்டமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு இருக்கிறது. நீரிழிவு நோய் என்பது தவிர்க்க முடியாத சில பாதிப்புகள் ஏற்படுத்தகூடிய நோயாக உள்ளது. பாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் பாதத்தை இழக்கும் நிலைமை சமுதாயத்தில் ஏற்படும்.
செவிலியர்கள், மருத்துவர்கள் என 28 ஆயிரம் பேருக்கு பாதம் பாதுகாப்பு திட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எந்த நோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிய வேண்டும். அப்போதுதான் உயிருக்கு உத்தரவாதம். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாத சிகிச்சை மையங்கள் என விரைவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. கால்களை இழந்தால் வாழ்க்கையே இழந்தோம் என்ற ஒரு சோகநிலை ஏற்படும். இவர்களை காக்கக்கூடிய திட்டம் தான் இந்த திட்டம்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "உலகில் பல்வேறு நோய் பாதிப்புகள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நீரிழிவு நோய் என்பது உலக மக்களை அச்சுறுத்தி வரக்கூடிய நோய்களில் முதன்மையான ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் பாத பாதிப்புகளுக்கு ஆளாகி கால்களை இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது.
பாத பாதிப்புகளைக் கண்டறிவது தொடர்பாக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 430 பேர்.