புதுச்சேரி:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது 64 வயதிலும் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று (பிப்.18) 150வது மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "தற்போதைய காலத்தில் புதுப்புது நோய்களின் தாக்கம் அதிகளவிலிருந்து வருகிறது. அது போன்ற நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு முக்கியமாக ஒருவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் தேவையாக உள்ளது.
எனவே, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் நடந்து பழகி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 'நடப்போம் நலம் பெறுவோம்' என்று 8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி திட்டத்தைத் துவக்கி உள்ளோம். பொது மக்களும் நடந்து உடல் நலம் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், 2004 அன்று சாலை விபத்தொன்றில் சிக்கி வலது கால் மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2014 பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற 21.1 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் போட்டியை ஓடத்தொடங்கி, ஆஸ்திரேலியா, கத்தார், இத்தாலி, ஆஸ்ட்ரியா, லண்டன், கிரீஸ், சிங்கப்பூர், கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற 12 வெளிநாடுகளில் 20 மெய் நிகர் மாரத்தான்கள் மற்றும் இந்தியாவில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, அசாம், பஞ்சாப், அரியானா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், கோவா, ராஜஸ்தான், ஜம்முகாஷ்மிர், ஹிமாச்சல பிரதேசம் என 20 மாநிலங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடி வருகிறார்.
புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் இன்று(பிப்.18) நடைபெற்ற 21.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான 150வது மாரத்தானை நிறைவு செய்தார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளின் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டு வரும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மாரத்தான் போட்டிகளில் 25 முறை 21.1 கி.மீ தூரம் பங்கேற்று ஓடியதற்காக, India Book of Records-இல் இடம் பிடித்தார். மேலும் பல இடங்களில் நடைபெற்ற 21.1 கி.மீ தூரம் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு 29 மாரத்தான் போட்டியை 2016 ஜூன் 26ஆம் தேதி வரையில் முடிக்கப்பெற்று Asia Book of Records-லும் இடம் பிடித்துள்ளார்.