சென்னை:சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024-2025 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவின் கீழ் 715 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “மருத்துவப் படிப்பு கலந்தாய்வு வழக்கமாக ஜுன் மாதம் முடிய வேண்டியது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளால் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து தேர்வாணையத் தலைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்படி பல குளறுபடிகளுக்குப் பிறகு ஒரு மாதம் காலதாமதமாக இந்த கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கலந்தாய்வில் அரசு உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் 496 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கும், 126 பல் மருத்துவப் படிப்பிற்கும் ஆணைகள் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பிற்கு செல்கின்றனர்.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களில் அதற்கான விவர அறிக்கைகள் வெளியிடப்படும். மேலும், மருத்துவமனையின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் எந்த கவலையும் பட வேண்டாம். மருத்துவ மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது.