சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2026 ஜூன் 30ஆம் தேதி வரையிலும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30ஆம் தேதி வரையிலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற ரூ.5 லட்சம் மற்றும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்கிறது.
புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியும். சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும்.