கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, "அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி விட்டோம். அதிமுக தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த பின் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம்.
தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அண்ணாமலை உணர்வார். அவர் என் மண் என் மக்கள் என்பதை விட்டுவிட்டு, சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றைப் பிழையோடு கூறக்கூடாது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தென் மாநிலங்களில் பாஜக கிடையாது. ஜெயலலிதா தான் பாஜகவைத் தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார். அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய் மற்றும் அத்வானி. இருவரையும் சென்னை மெரினாவுக்கு அழைத்து வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை ஜெயலலிதா தலைமையேற்று நடத்தினர்.