மதுரை:நெல்லை மாவட்டம் ஜோதிபுரம் கிராமத்தில் களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த நடராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பாளையங்கோட்டை தாலுகா ஜோதிபுரம் கிராமத்தில் உள்ள களம் புறம்போக்கு நிலத்தில் 2 கோயில்கள், 21 புனித பீடங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு படிப்பகம் அமைந்துள்ளது. அதோடு இந்த பகுதியை களத்து மேடாக இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கான நடவடிக்கையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கிராம மக்களிடம் இது தொடர்பாக எவ்விதமான கருத்து கேட்பும் நடத்தாமல், மாவட்ட நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே நெல்லை மாவட்டம் ஜோதிபுரம் கிராமத்தில் களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.