மதுரை:மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்தாண்டு அக்டோபர் 18 ஆம் தேதி நாளிதழில், ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பான செய்தி வெளியாகியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ஈஷா யோக மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அதற்கான மனு ரசீதும் வழங்கப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லலிதா குமாரி - உத்தரப்பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், ஈஷா யோக மையத்திற்கு எதிராக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக காவல்துறை தலைவர் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஈஷா யோக மையத்தில் நடைபெற்று குற்றங்கள் விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.