கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்தியக் குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற மூன்று மாத கால உறுப்பினர்கள் சேர்ப்பு, புதுப்பித்ததல் இருக்கப் போகிறது. இன்றைய குழுவில் முடிவு செய்து இருப்பது போல ஒரு பூத்திற்கு 200 பேர் சேர்க்கப்பட வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2026 தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெறுவதற்கான காலகட்டம் உருவாகி உள்ளது.
கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தென் சென்னை போன்ற பல நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த பின் எங்களின் கட்சிக்கான வாக்காளர் பட்டியல் குறித்த செயல்பாடுகள் நடைபெறும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி தருவதில்லை எனக் கூறுவது நொண்டிக்குதிரைக்கு சறுக்குகின்றது சாக்கு என்பது போல் உள்ளது. கடந்த 10 ஆண்டில் மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்து, ஏற்கனவே பல முறை பிரதமர், உள்துறை அமைச்சர் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றது போல செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
மத்திய அரசு தான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என இவை அனைத்திற்கும் செலவு செய்கிறது. நாம் சாலை போடும்போது வேலைவாய்ப்பும் வருகிறது. ஆகவே, மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தி மத்திய அரசாங்கம் எந்தவித செலவையும், எந்த ஒரு மாநிலத்திற்கும் செய்ய முடியாது.