ஈரோடு: ஈரோடு பாரதி ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தேர்தல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, "தமிழக ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அப்போது வாழ்த்து பாடல் பாடுபவர் வராததால் தற்காலிகமாக வேறு ஒருவர் பாடினார் அதில் சில தவறுகள் ஏற்பட்டன அதற்காக ஆளுநர் மீது கடும் விமர்சனங்களை திமுக வைத்தது.
ஆனால், தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் இதே போன்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒருமுறை அல்ல மூன்று முறை பிழை ஏற்பட்டது. இதனை டெக்னிக்கல் ஃபால்ட் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஆளுநரை அநாகரிகமாகப் பேசிய துணை முதலமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், அவரை முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "முதலமைச்சர் போதைக்கு எதிராக வீடியோ வெளியிட்டுள்ளார். அது தினமும் தொலைக்காட்சியில் கூட தினமும் விளம்பரம் செய்யப்படுகிறது. அதில், ஒரு தந்தையை போல் நான் அழைப்பு விடுக்கிறேன் என்கிறார். ஆனால், இங்கு மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருப்பது யார்?