சென்னை:சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களது உடைமகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்தில் ஏற அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சுமார் 45 வயது தனியார் பள்ளி ஊழியர் ஒருவர், இந்த விமானத்தில் டெல்லி செல்வதற்காக வந்தார். அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, அந்த கைப்பையில் வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தனியே நிறுத்தி வைத்தனர். அதோடு, அந்த கைப்பையை எடுத்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறந்து பார்த்தனர். அந்த கைப்பைக்குள் 8 எம்எம் ரக துப்பாக்கி குண்டுகள் மூன்று இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அந்தத் துப்பாக்கி குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்ட குண்டுகள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலப் பயணியின் டெல்லி பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பயணி தான் உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றுவதாகவும், தனது மகன் சென்னையில் ஒரு கல்லூரியில் படிப்பதால் அவரைப் பார்த்து விட்டு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் உத்தரப்பிரதேசம் செல்ல டெல்லி விமானத்தில் பயணிக்க வந்ததாகவும் கூறினார்.