சென்னை:இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான தொம்மராஜு குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது சுற்றில் சீனாவின் டிங் லாரனை வென்று இளம் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார். இவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குகேஷ்-க்கு சென்னையில் அவர் படிக்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குகேஷின் வெற்றி குறி்தது அவரது பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் இன்று ( டிச.13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "குகேஷ் எங்கள் பள்ளியில் படிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. மாணவர்களின் திறமையை சிறுவயதிலேயே அறிந்து அவர்களை ஊக்குவிப்பதே எங்கள் பணி. ஒவ்வொரு மாணவர்களும் எதில் திறமையாக உள்ளனர் என்பதை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். குகேஷ் எங்கள் பள்ளியில் சேர்ந்தது உணர்ச்சிவசமான ஒன்று.
முதலாம் வகுப்பு முதலே அவர் எங்கள் பள்ளியில் செஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சிறிய பரிசுகளை வென்றதில் இருந்து மிகவும் ஆர்வமடைந்து இன்று உலக அளவில் சாம்பியன் ஆகியுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குகேஷ் ஊர் திரும்பும்போது பெரிய அளவில் விழா எடுப்போம். அவ்வப்போது தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போனதால், அவர் தற்போதும் எங்கள் பள்ளியில் படிக்கிறார். 12ம் வகுப்பு படித்து வருகிறார்" என்று தெரிவித்தார்.