சென்னை: செங்கல் சூளைகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள், புதிதாக தொடங்கப்படும் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு செங்கல் சூளைக்கும், மற்றொரு செங்கல் சூளைகளுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள் மற்றும் பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.
இந்த வழிகாட்டுதல்கள் புதிதாக தொடங்கப்படும் செங்கல் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கோவை மாவட்டம், தடாகம் பகுதியைச் சேர்ந்த எம்.மாணிக்கராஜ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.