தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் வரி உயர்வு.. அம்மா உணவகங்களுக்கு நிதி.. சாலைகளில் திரியும் மாடுகள் விவகாரம்.. சென்னை மாமன்ற கூட்டம் ஹைலைட்ஸ்! - Chennai Corporation meeting - CHENNAI CORPORATION MEETING

Chennai Corporation meeting: சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தொழில் வரியினை 35 சதவீதம் உயர்த்தவும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:24 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

தொடங்கும் முன் மறைந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங்கிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன் மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் நகலை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழில் வரியினை 35% உயர்த்த தீர்மானம்:சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35 சதவீதம் உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புச் சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவுகள் 274-288ல் தொழில் வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம் எனவும், அத்தகைய திருத்தம் 25 சதவீதத்திற்கும் குறைவில்லாத வகையிலும், 35 சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்க வேண்டும். தொழில் வரி விதிகம் 2,500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35 சதவீதம் தொழில்வரி உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை. 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாக உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மேலும் தொழில் வரி விகிதத்தை திருத்துவது குறித்து மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும், மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மா உணவகங்களுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.7 கோடி:பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகளிலும், தற்போது 390 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட அம்மா உணவகங்களுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2013ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலங்களில் கட்ட கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை மண்டலங்களில் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் பழுது நீக்கம் செய்ய அம்மா உணவக சில்லறை செலவின் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்ததில் 23 ஆயிரத்து 848 பாத்திரம் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற 7 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்களை 30 நாட்களுக்குள் உரிய விதிகள் அடிப்படையில் பழுது நீக்கம் செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை உயர்த்த முடிவு:சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படுவதால் சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை, 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 15 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் ஆயிரத்து 425 மாடுகள் பிடிக்கப்பட்டு, 59 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக்க முன்னாள் படைவீரர் கழகத்திற்கு அனுமதி:சென்னையில் சாலையோரம் வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பார்க்கிங் கட்டணம் வசூல் மேற்கொள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு அனுமதி வழங்கி சென்னை மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் 70:30 விகிதத்தின் அடிப்படையில் TEXCO நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பார்க்கிங் வருவாயில் 70 சதவீதம் சென்னை மாநகராட்சிக்கும், 30 சதவீதம் TEXCO நிறுவனத்திற்கும் வழங்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 47 வாகன நிறுத்த இடங்களிலும் இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், குறிப்பாக பிரிமியம் ஏரியாவில் (பாண்டி பாஜர் சாலை) இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 4 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாயும் என வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. TEXCO நிறுவனம் வசூல் பணி தொடரும் வரை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் உரிமம் கட்டணம் உயர்வு: சென்னை மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமம் கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், மாநகராட்சியிடம் பதிவு செய்வதும் உரிமம் பெறுவதும் கட்டாயமாகும்.

அவ்வாறு பதிவு செய்பவர்கள், மாநகராட்சிக்கு பதிவுக் கட்டணம் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை மாநகராட்சி மாற்றியமைத்து உள்ளது. அதன்படி, வணிக தன்மைக்கு ஏற்ப மாநகராட்சியில் புதிய கட்டணம் மாற்றி அமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, 500 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணமானது, மிகச்சிறிய வணிகம் 3,500 ரூபாயும், சிறிய வணிகம் 7,000 ரூபாயும், நடுத்தர வணிகம் 10 ஆயிரம் ரூபாயும், பெரிய வணிகம் 15 ஆயிரம் ரூபாயும் என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது

பேக்கரி, மருந்து கடை, முடி திருத்த கடைகளுக்கு 10 ஆயிம் ரூபாய் வரையும், துணிக்கடைகளுக்கு 15,000 ரூபாய் வரையும், சினிமா ஸ்டூடியோ, நகைக்கடைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும் திருமண மண்டபங்களுக்கு 30,000 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

join ETV Bharat WhatsApp Channel Click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்பதே அரசின் இலக்கு" - அமைச்சர் மா.சு உறுதி! - minister Subramanian

ABOUT THE AUTHOR

...view details