சென்னை :அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது, "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணை 354ன் படி ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மேலும், அரசாணை 293-ஐ மாற்றம் செய்து வழங்கியதில் ஆரம்ப சுகாதாரநிலைய மற்றும் பல் மருத்துவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்க வில்லை. எனவே, அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைத்து காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த 10 வருடமாக ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகள், புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் புதியாக மருத்துவர், செவிலியர் பணியிடங்களை உருவாக்கவில்லை. சீமாங் திட்டத்தை ஆரம்பிக்கும் போது அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்களை மாற்றுப் பணியில் அமர்த்தினர். அந்த திட்டத்திற்கு என புதியதாக மருத்துவர்களை நியமனம் செய்யவில்லை. விபத்து அவசர சிகிச்சையை அளிக்கும் தாய் திட்டத்திற்கும் புதியதாக மருத்துவர்களை நியமனம் செய்யவில்லை.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அனுமதிக்கவில்லை. சுமார் 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
குறைந்த அளவில் மருத்துவர்களை வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் பணி செய்ய அழுத்தம் தருகின்றனர். இதனால் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத நிலையும், மருத்துவர்களின் உடல் நலன் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, அரசு அனைத்து மருத்துவமனைகளிலும் சுழற்சி முறையில் பணி செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க :'மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யமாட்டோம்'? தமிழக அரசு மீது சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வருத்தம்!
ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பணியில் 2 மருத்துவர்கள் இருக்கும் அவல நிலையும் உள்ளது. எனவே 2 மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் 7 மருத்துவர்களை நியமனம் செய்து சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும்.