விழுப்புரம்: கடந்த திங்கட்கிழமை அன்று (ஏப்.22) இரவு விக்கிரவாண்டியில் இருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் வந்துள்ளது. அப்போது, அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண் பயணிகள் சிலர் பேருந்தை நிறுத்த வேண்டி கை காட்டியுள்ளனர்.
ஆனால், அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனிடையே, சமூக ஊடகங்கள் மூலம் விழுப்புரம் மண்டல போக்குவரத்து ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அரசு நகரப் பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் நகரப் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஆறுமுகம் என்பதும், நடத்துநர் தேவராசு என்பது தெரியவந்தது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநரான கே.ஆறுமுகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் வி.அர்ச்சுனன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம், விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த (TN 32 N 2218) தடம் எண் T1F பேருந்து விக்கிரவாண்டியிலிருந்து, விழுப்புரம் வரும்பொழுது, பெண் பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் புகார் வந்ததின் அடிப்படையில், அப்பேருந்தின் ஓட்டுநர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் நடத்துநர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:"லிப்ட் கொடுத்தது ஒரு குத்தமா?" - பைக்கை திருட முயற்சி செய்த சிறுவன் உள்பட மூவர் கைது!