திருச்சி:நேற்றைய முன் தினம் பிற்பகல் 3:30 மணி அளவில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகர் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டிய நிலையில், நடத்துநராக திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சேர்ந்த முருகேசன் (54) என்பவர் பணியாற்றி உள்ளார்.
திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துநருக்கு என்று தனி இருக்கை கிடையாது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துநர் முருகேசன் உட்கார்ந்திருந்துள்ளார். இவ்வாறு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து, கலையரங்கம் தியேட்டரைக் கடந்து, மெக்டொனால்ட்ஸ் சாலை வலது புறம் திரும்பியுள்ளது.
அப்போது, நடத்துநர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை, திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக சாலையில் வந்து விழுந்துள்ளது. அதில் உட்கார்ந்து இருந்த நடத்துநர் முருகேசன் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்துள்ளார். இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.