மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு காரில் சாராயம் கடத்தி சென்ற நான்கு பேரை நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிங்காரம் தலைமையிலான போலீசார் விரட்டிச் சென்றனர்.
அப்போது, கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் சென்றபோது சாராயம் கடத்தி சென்ற காரை போலீசார் வழிமறித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் காரை வழிமறித்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மீது, மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்(54) என்பவர் காரை மோதிவிட்டு தப்பிச் சென்றார்.
இதில், மார்பு பகுதியில் எலும்புகள் உடைந்து நிலையில் சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்(54), சங்கர்(44), புளியம்பேட்டை கருணாகரன்(54), ராமமூர்த்தி(44) ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!
இதனிடையே, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானபோது முக்கிய குற்றவாளிகளான கலைச்செல்வனுக்கு பதிலாக செல்வம் என்பவரும், கருணாகரனுக்கு பதிலாக செல்வக்குமார் என்பவரும் ஆள்மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் ஆஜராகி பொய்யான தகவலைக் கூறி சரணடைந்தனர்.
அதனை அடுத்து, இந்த வழக்கில் 6 பேர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று (புதன்கிழமை) நீதிபதி விஜயகுமாரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ராசேயோன் ஆஜரானார்.
அப்போது, "பொதுமக்களின் பாதுகாப்பை ஊறுதி செய்யும் காவல்துறையை சேர்ந்த தலைமைக் காவலரை, பணியில் இருந்தபோது கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி கலைச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்து, தண்டனை வழங்காமல் வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) வழங்குவதாகக் கூறி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:ரூ.4 கோடி விவகாரம்; உறவினர் வாக்குமூலத்தால் நயினாருக்கு மீண்டும் பறந்த சம்மன்!