சென்னை:தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2024ஆம் ஆண்டின் தரவரிசையில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக 'தமிழகத்தின் உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தரவரிசையில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார். இதில், தேசிய அளவில் சென்னை ஐஐடியும், மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழகமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “தேசிய அளவிலான என்ஐஆர்எப் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவது மிகப்பெரிய சாதனையாகும். குறிப்பாக, நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
இதையும் படிங்க:நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்
முன்பாக கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி, தரத்துடன் சிறப்பானதாக இருக்க வேண்டும். ஐஐடி மெட்ராஸ் வளர்ந்து வருகிறது. அறிவுசார் சொத்துக்களை அதிகரிப்பதில் ஐஐடி மெட்ராஸ் வீரியமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பி.எச்டி (PhD)படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். பிஎச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒரு சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிஎச்டிக்கான கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. எனவே, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பி.எச்டி கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுநிலை படிக்கும் போதே நெட் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். நெட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி , அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.