சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா நேற்று (பிப்.19) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இரு மாநில பிரதிநிதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “காலனிய ஆட்சியில் மாநிலங்கள் என்பது இல்லை. மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரும் போது போக்குவரத்து வசதி கூட பெரிதும் இருந்தது இல்லை. இது ஒரு பரந்த நாடு, பன்முகத்தன்மை கொண்டது. மாநிலங்கள் உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நடக்க வேண்டிய நிகழ்வு அல்ல. கல்லூரிகள், பொது இடங்களில் நடந்திருக்க வேண்டியது. அப்போது தான் இரு மாநில கலாச்சாரமும் ஒருங்கிணைந்து அனைவராலும் அறியப்படும்.
அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில நண்பர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்தும், கல்லூரியில் பயின்றும் வருகிறார்கள். இந்நிலையில், என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், வெளி மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள். தமிழ் நண்பர்களை மற்ற மாநில நண்பர்கள் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம், பரஸ்பர பந்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
தமிழ் மொழி தெரிந்தால், இந்த மாநிலத்தைச் சுற்றி உள்ள பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் கூட தமிழ் செய்தித்தாள்களைப் படிக்க முடியும், யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். அந்த பந்தம் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. நான் கேரளாவில் பணியாற்றும் போது மலையாளம் கற்றுக் கொண்டேன்.