தேனி: தேனியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர், நாட்டின் எதிர்காலத் தலைவர்களான மாணவர்களாகிய உங்கள் முன்பு அமர்ந்து இருப்பது பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார்.
கிராமப் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய தொழில்நுட்பம் மட்டும் போதுமா என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், “தொழில்நுட்பம் மட்டும் போதாது. உலகத்தில் பல்வேறு பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கிராமப் பகுதியில் இருப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம்தான் தெரிய வருகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அது உங்களை அழித்துவிடும்.
வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும்போது, அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை தயார்ப்படுத்திக் கொண்டால், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகள் வருவதை நீங்கள் உருவாக்க வேண்டும். தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து கவலைப்பட தேவை இல்லை. நான் மிகவும் கிராமப் பகுதியில் இருந்து வந்தவன். என் கிராமத்தில் 12ஆம் வகுப்பு வரைதான் இருந்தது. எங்கள் கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார வசதி கூட இருக்காது.