தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...அரசு பள்ளி ஆசிரியர்கள் மூவர் கைது! - KRISHNAGIRI POCSO CASE

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அரசு பள்ளி மாணவியை ஆசிரியர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக வெளியான சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2025, 7:14 PM IST

Updated : Feb 6, 2025, 5:19 PM IST

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. உடனே இது குறித்து அறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை? என்று சக மாணவிகளிடம் விசாரித்தார்.

அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளோம் என்றார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார். இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் என்று அந்த சிறுமியின் தாயார் கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தாயார் கூறினார்.

உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏலகிரியை உலுக்கிய மூதாட்டி கொலை... தனிமையில் இருந்த காந்தாவுக்கு என்ன நடந்தது? போலீசார் விசாரணை!

சிக்கிய ஆசிரியர்கள்

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (57), மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர்.

தொடரும் கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியுள்ளாக்கியது.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் மூன்று ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Last Updated : Feb 6, 2025, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details