திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால், அரசின் திட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த எந்த ஒரு நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என்பது விதி.
இதனிடையே, திருச்சியில் திமுக சார்பில் கடந்த சில நாட்களாக கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவற்றை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று (பிப்.1) ஒத்தக்கடை, தில்லை நகர், மிளகுபாறை, பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், தொழிலதிபருமான அருண் நேரு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேஷ்டி, சட்டை, புடவை, துண்டு, காலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரம்மாண்ட பேனர்களை திமுகவினர் வைத்திருந்தனர்.
இதையும் படிங்க:“எம்ஜிஆர் பற்றி பேச ஆ.ராசாவிற்கு எந்த தகுதியும் இல்லை” - கடுமையாக சாடிய கடம்பூர் ராஜு