மதுரை: தமுக்கம் மைதானத்தில் நேற்று(மே 23) மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார். இதனைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.
நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2024 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 214வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி தொடர்ந்து வரும் ஜூலை 6ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.