சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் செய்தி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். அதில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர்”.
“பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சு”: “ஆனால் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது”.
முன்று ஆண்டுகளில் ஏற்பட்ட முடக்கங்கள்: “ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கினர். அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கினர். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினர்”.
இதையும் படிங்க: ‘மூஞ்ச பார்த்தாலே தெரிகிறது’ - சமூகத்தை குறிப்பிட்டு இளைஞரை தாக்கிய போலீஸ்!
பணியிடங்களை நிரப்புவதில்லை: “பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினர். ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம்”.