தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதனிடையே, மத்திய அரசு ரூ.750 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்டம் எல்லை வரை உள்ள 86 கிலோ மீட்டர் சாலையில் மேம்பாட்டுப் பணி தொப்பூர் சுங்கச்சாவடி வரை முடிந்த நிலையில், தற்போது தொப்பூர் வனப்பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தொப்பூர் வனச் சாலையில் இருவழிப் பாதையை ஒருவழிப் பாதையாக மாற்றி, அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தருமபுரி அரசு நகரப் பேருந்து ஆஞ்சநேயர் கோயில் அருகில் செல்லும் பொழுது, பேருந்தின் பிரேக் பழுதானதால், எதிரே சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற லாரியின் மீது மோதியது.
இதில், அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. லாரியின் ஓட்டுநர்களான சேலம் அரியலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (27) மற்றும் எடப்பாடி கொல்லப்பட்டியைச் சேர்ந்த அருண் (23), சேலம் அரியலூர் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் கண்ணன் (19) ஆகிய மூன்று இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர், அவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.