இண்டிகோ விமான கழிப்பறையில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல் சென்னை:அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (மார்ச் 5) வந்துள்ளது. இந்த விமானம், சர்வதேச விமானமாக வந்துவிட்டு, பின்னர் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த விமானத்தின் கழிவறையில் மின்சார வயர்கள் உள்ள கேபிள் பாக்ஸ் சற்று திறந்த நிலையில் இருந்ததைக் கண்ட விமான ஊழியர்கள், இது குறித்து சென்னை விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், திறந்த நிலையில் இருந்த கேபிள் பாக்ஸ் பகுதிக்குள், கருப்பு டேப் சுத்தப்பட்ட ஒரு பார்சல் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அதில் இருப்பது கடத்தல் தங்கம் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த பார்சலை பிரித்துப் பார்த்து ஆய்வு செய்தபோது, அதனுள் சுமார் 4.5 கிலோ எடையுடைய தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த நிலையில், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கடத்தல் ஆசாமி யார், தங்கக் கட்டிகளை கழிவறையில் மறைத்து வைக்கக் காரணம் என்ன, கழிவறையில் மறைத்து வைத்த தங்கத்தை, ஊழியர்கள் மூலம் வெளியில் எடுத்துவர திட்டமிட்டாரா அல்லது இந்த விமானத்தில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு யாராவது ஒருவர், உள்நாட்டு பயணியாக பயணம் செய்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் இந்த கடத்தல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தாரா என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, அந்த விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய 4.5 கிலோ தங்கk கட்டிகள் விமானத்தின் கழிவறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்த தங்கம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?