சென்னை:சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐடி தொழிலாளியின் வீட்டில் 50 சவரன் தங்க நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரங்கராஜ் (67) ஹேமலதா (63) தம்பதி. இவர்களின் மகனான ஆதித்யா (38) ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30) மற்றும் இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாட மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடித்து நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டிற்குத் திரும்பி உள்ளனர்.
அப்போது பூட்டி இருந்த வீடு திறந்து கிடப்பதையும், பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு இருந்துள்ளது.
மேலும் வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சோதனை செய்ததில், 50 சவரன் நகை வைத்திருந்த சிறிய லாக்கர் ஒன்றை மர்ம நபர்கள் கையோடு தூக்கிச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குடும்பத்தினர் 50 சவரன் தங்க நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டின் அருகே எந்த சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படாததால் குற்றவாளியைப் பிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி.. பெண்ணை கடித்ததால் பரபரப்பு - வெளியான சிசிடிவியால் மக்கள் அச்சம்! - Bear Attack In Tirunelveli