மதுரை: மதுரை மாநகர் சர்வேயர் காலனி பகுதியில் இன்று (ஏப்ரல் 08) காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் 67 கிலோ அளவிற்கான தங்கம் இருப்பது தெரிய வந்தது. மதுரை விமான நிலைய பகுதியில் இருந்து வந்த அந்த வாகனத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகள் விநியோகம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த 67 கிலோ தங்க நகைகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லாத நிலையில், வாகனமானது நகைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் நகைகளைக் கொண்டு வந்த நிறுவனத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதை அடுத்து அதனை ஆய்வு செய்து 67 கிலோ நகைகள் மீண்டும் நகைக்கடைகளின் நிறுவனத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மதுரையில் கடந்த மாதம் 17ஆம் தேதி வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 18 கோடி மதிப்பிலான 29.7 கிலோ தங்கம் மற்றும் வைரத்தைத் தேர்தல் பறக்கும்படையினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைப் பின்னர் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பத்தனர்.
இந்த நிலையில் மதுரையில் மீண்டும் பறக்கும் படை சோதனையின் போது சுமார் 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அதற்கான ஆவணங்களைக் காண்பித்த நிலையில், மீண்டும் நகைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஆட்டுக்குட்டிக்கு மாலை அணிவித்து அண்ணாமலையை கிண்டல் செய்த ஆ.ராசா! - Lok Sabha Election 2024