கோயம்புத்தூர்: கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "திருச்சியில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொடர்பாக தென் மண்டலத்தை தொடர்ந்து, கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. காமராஜர் விழாவை சிறப்பிக்க அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் வெடி விபத்தும், உயிரிழப்பும் தொடர் கதையாக உள்ளது. அரசு இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமாக சார்பில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடக்தியுள்ளோம்.
ஆனால், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளச்சாராயத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக இது உள்ளது. சாராயக்கடைகளை மூடுவது சாத்தியமில்லை என கூறுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.
இதுகுறித்து அமைச்சர் சபை நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணமில்லை என கூறுவதும், ஏழை எளிய மக்கள் இதில் சிக்கி உயிரிழப்பதும் வேதனையாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அபராதம், சிறையிலடைப்பு என அரசு சொல்வது, செயல் வடிவிலும் இருக்க வேண்டும். இதில் சிபிஐ விசாரணை வைத்திருக்க வேண்டும். அரசு ஏன் சிபிஐக்கு பயப்படுகிறது?" என விமர்சித்தார்.