தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மேகதாது அணை என்பது பயிர் பிரச்னை மட்டுமல்ல.. உயிர் பிரச்னை" - ஜி.கே.வாசன் - Mekedatu Dam issue - MEKEDATU DAM ISSUE

G.K.Vasan talk about Mekedatu Project issue: மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் எனவும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்னை மட்டுமல்ல, உயிர் பிரச்னை எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

G.K.Vasan talk about Mekedatu Dam issue
G.K.Vasan talk about Mekedatu Dam issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:37 PM IST

ஜி.கே.வாசன் பேட்டி

தூத்துக்குடி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக இந்தியாவில் நடந்து முடிந்து 7 கட்டங்களில் 2வது கட்டம் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.

குறிப்பாக, இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரையில், முரண்பாடு உடைய மொத்த வடிவம் உருவம் என்று நாங்கள் கூறினோம். மாறாக, நேற்றைய தினம் கேரள மாநிலத்தினுடைய முதலமைச்சர் இந்தியா கூட்டணியே அல்ல என்று உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக, ஒரு வாரத்தில் 4 மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்து வேதனையாக உள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக, தமிழ்நாடு அரசு செயல்பட தவறிவிட்டது. தயவுசெய்து அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் பள்ளி, கல்லூரிகள் துவங்குவதற்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்காக அனைத்து பணிகளையும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். மேகதாது அணை குறித்து சர்வ சாதாரணமாக கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெளிப்படையாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் மேகதாது அணை கட்டினால் இங்கு டெல்டா பகுதியில் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்னை மட்டுமல்ல, உயிர் பிரச்னை.

திமுக ஆட்சியாளர்கள் எந்த விதமான ஒரு ஆக்ரோஷமான பதிலையும், நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்களுக்காக ஒலிக்கவில்லை என்றால், நிச்சயமாக கூட்டணி அரசியல் வாக்கு வாங்கிக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமான செய்தி. விவசாயிகள் பக்கம் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நாட்டு மக்களின் சொத்துக்களை ஆய்வு செய்வது என்பது தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் சொல்வதாக மக்கள் கருதுகின்றனர். மத்தியில் பாஜக அரசும் சரி, பிரதமரும் சரி வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற உணர்வோடு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை பின்பற்றுவதை மத்திய அரசு குறிக்கோளாக வைத்திருக்கின்றது.

பேருந்தில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். விபத்துக்கள் குறையும். பாதுகாப்பான முறையில் மாணவர்களும், பொதுமக்களும் பயணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மக்களுடைய எண்ணங்களுக்கு மாறாக, வடலூரில் சத்தியநாத சேவை சர்வதேச மையம் என்ற பெயரில் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக அன்னதானம் செய்யும் பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பக்தர்களுக்கு விருப்பமில்லாத பணியை மத்திய அரசு தொடரக்கூடாது.

தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்: நான் அமைச்சராக இருந்தபோது, தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு நிலையில் உயர்த்தக்கூடிய திட்டங்கள் கொண்டு வந்தது உண்மைதான். பாஜக அரசு அதனை பெருமை சேர்க்கின்றது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு உண்டான நேரம் இருக்கின்றது.

பாஜக ஆட்சியில் தங்கு தடையின்றி ஒரு காலக்கெடுவில் திட்டங்கள் நிறைவேற்றுகிறது. பொதுவாகவே, தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்து கொண்டுள்ளது. மேலும், எங்களுடைய சதவீதம் எதிர்பார்ப்புக்கு மேல் தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் எதிர்மறை வாக்கு எங்களுடைய வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்பதை முழுமையாக நம்புகிறேன். மேலும், மத்திய அரசினுடைய தொடர் திட்டங்களை அதற்கு உரிய சாதனைகள், அதற்குரிய பொருளாதார வளர்ச்சி நாட்டினுடைய பாதுகாப்பு இதைத்தான் வாக்காளர்கள் மையமாக வைத்து வாக்களித்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நூற்றுக்கணக்கானோருக்கு வாக்கு இல்லை. இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கொத்துக் கொத்தாக வாக்குரிமை பறிப்பு.. திமுக மௌனம் சாதிப்பது ஏன்?" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! - Tamilisai Soundararajan

ABOUT THE AUTHOR

...view details