திருச்சி:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ஜி.கே.வாசன் பேசுகையில், “வருங்காலத்தில், தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற வேண்டும். தமிழகம், உண்மையிலேயே அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும்.
அதற்கு தேவை, காமராஜர் கடைபிடித்த நேர்மை, எளிமை, துாய்மை, வெளிப்படைத்தன்மை. இந்த தாரக மந்திரத்தை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
வருங்காலம் நல்ல காலம், வசந்த காலம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்று உறுதி ஏற்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில் என அனைத்திலும் தமிழகம், இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்ந்தது.
தற்போது, தமிழகத்தில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் நோயாளிகளைப் போல தமிழக விவசாயிகளின் நிலை உள்ளது. கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காமல், தமிழக அரசு வாய் மூடி இருக்கிறது.