சென்னை: இந்தியா கூட்டணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, நாட்டினுடைய பொருளாதார பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு குறித்து, கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயலாற்றுவதில் தமாகா பெருமை கொள்கிறது.
பாஜக சார்பாக, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நாளை (பிப்.27) பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதன் அடிப்படையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும். பாதுகாப்பு ரீதியாக வலிமை அடையும். இதை கருத்தில் கொண்டே பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது. மத்திய அரசிடம் இருந்து நல்ல திட்டங்களை பெறவும், செயல்படுத்தவும் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும்.
ஏழை எளிய மக்கள் மற்றும் இளைஞர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவின் வெற்றி என்பது உலக அளவில், இந்தியாவை பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக மாற்றும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கு தடையின்றி படிப்படியாக அனைத்து துறையிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.