தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 3:43 PM IST

ETV Bharat / state

காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திமுக திகழ்கிறது.. பிரதமரின் தமிழக வருகை குறித்து ஜி.கே.வாசன் பேச்சு!

G.K.Vasan: பிரதமரின் தொடர் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு திமுகவிற்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்துள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்
காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திமுக திகழ்கிறது

ஜி.கே.வாசன் பேட்டி

சேலம்:விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (மார்ச் 6) கலந்துரையாடல் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் 4 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அரசிடம் தங்களது எதிர்பார்ப்பு குறித்தும் அப்பகுதியில் வசிக்கும் 4 கிராம மக்கள் ஜி.கே.வாசனிடம் விளக்கிப் பேசினர். இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், “இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், "விமான நிலைய விரிவாக்கத்திற்காக அதிகாரிகள் சிலர் மக்களை மிரட்டுவது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள மாற்று இடத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும், நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு உள்ளது” என்றார்.

தமிழகத்தில், பிரதமரின் தொடர் வருகையால் எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிரதமர், நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து சென்று, மாநிலத்தில் எந்த ஆட்சி இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டான ஆட்சியாகவும், கட்சியாகவும் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில் திமுக அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் அதிகரித்து வருகிறது.
அதனால், பிரதமரின் வருகை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்று பேசுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுபடுத்த காவல்துறைக்கு ஆட்சியாளர்கள் முழு சுதந்திரத்தை வழங்கவில்லை. இதை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள், மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைப்பது குறித்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் இந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகள் தவறான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்து வருகின்றனர். இதனால் எங்களின் பாதிப்புகள், மத்திய அரசுக்கு தெரியவில்லை. இதே பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனைப் பயன்படுத்தி விமான நிலைய விரிவாக்கப் பணியை மேற்கொள்ள மத்திய அரசு முன் வர வேண்டும்.

இரும்பாலை பகுதியில், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. அவற்றை பயன்படுத்தினால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், வாழ்வாதாரம் மற்றும் வீடு, வாசல் இழந்து துன்பப்பட தேவையில்லை. இதனை மத்திய அரசு உணர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:"திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது"- திருமாவளன் கூறும் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details