தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பிரதமர் மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கூறும் கருத்தை ஏற்க முடியாது” - ஜி.கே.வாசன் பதில்! - GK Vasan - GK VASAN

G. K. Vasan: பிரதமர் மோடி மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கட்சி கூறும் கருத்தை ஏற்க முடியாது எனவும், மத்திய பாஜக அரசு மத நல்லிணக்க அரசாகவே செயல்பட்டு வருகிறது எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு புகைப்படம்
ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 7:27 PM IST

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த மாறன் என்ற வேணுகோபாலின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது, “கோடை காலத்தில் மழை பெய்தால் முன்னெச்சரிக்கைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்த வெளி நெல் கொள்முதல், நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் அமைக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அரசு செயலாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க வேண்டும். மக்களின் கோடை கால மின்சாரச் சேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை. மேலும், குடிநீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது மக்களின் கடமையாக இருக்கிறது. அதற்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர்கள் மறைவால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
காவல் துறை ஒரு காலகட்டத்திற்குள் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. கஞ்சா கடத்தலை ஒழிக்கும் வகையில் அரசின் செயல்பாடு இல்லை என்பது பொதுமக்களின் கருத்து.

கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு ஆட்சி அடிப்படையில் மக்கள் பெற்ற சிரமங்கள் ஏராளம். சொத்து, தண்ணீர், பால் விலை உயர்வு ஏற்படுத்தி, மக்கள் மீது சுமையை ஏற்றிய அரசாக உள்ளது. சவுக்கு சங்கர் கைது குறித்த ஒரு உண்மை நிலை தெரிய வேண்டும். அரிசியில் உள்நோக்கம் உள்ளதா, இல்லையா என்று மக்களுக்கு தெரிய வேண்டும்.

மறைந்த காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு வழங்கப்பட்ட பத்ம விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு முழுமையாக சரியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மும்பை தமிழகப் பகுதிகளிலும், டெல்லி தமிழகப் பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என்றார்.

மேலும், “அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவது தான் மாணவர்களின் நலனுக்கு நல்லது. நீட் தேர்வு வேண்டும். தேர்வை முறையாக சரியாக நடத்துவது தேர்வை நடத்தும் குழுவின் கடமை. அதை அவர்கள் சரியாக செய்யத் தவறினால், அதன் உள்நோக்கம் என்ன? தவறு எங்கே நடந்தது என்பதை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிப்படுத்த வேண்டும். தவறு செய்தவர்கள் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தவறுகள் நடந்தால் சரி செய்யப்பட வேண்டும். அதற்காக கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பது சரி அல்ல. தமிழக மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும், அரசு பயிற்சி மையம் முறையாக செயல்பட வேண்டும். பிரதமர் மோடி மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கட்சி கூறும் கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கவில்லை. மத்திய பாஜக அரசு மத நல்லிணக்க அரசாகவே செயல்பட்டு வருகிறது.

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பொருளாதாரத்தை, நாட்டை உயர்த்திருக்கிறார் பிரதமர். ஒரு இஸ்லாமியருக்கு கூட திமுக தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் எதையும் யாருக்கும் எதிர்பார்த்தது இல்லை. சட்டமன்றத்தில் வளமாக குரல் கொடுக்கக்கூடிய அணி வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைக்கப்பட்டது” என அவர் கூறினார்.

இதையும் படிங்க:'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் உறுதியளித்த சவுக்கு சங்கர்? - Savukku Shankar

ABOUT THE AUTHOR

...view details