திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின் முக்கிய அங்கமாகத் தேர்த் திருவிழா இன்று (ஜன.24) நடைபெற்றது.
கோயில் குருக்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி திருத்தேர் வடம் பிடித்துத் தேர்த் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இப்பகுதியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இஸ்லாமியர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்த சம்பவம் இந்து மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து, முஸ்லிம் சமுதாய ஒற்றுமையை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இஸ்லாமியர்கள் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவால் பங்கேற்றனர். இதற்கிடையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அக்லாயா என்ற பெண் தேர்த் திருவிழாவில் பங்கேற்றது அப்பகுதி மக்களிடம் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அக்லாயாவின் மகன் டெல்லியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, ரவணசமுத்திரம் பகுதியில் உள்ள ராதிகா என்பவரது மகள் டெல்லியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.