கரூர்: கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் கடைவீதியில் இன்று(ஏப்.6) அதிமுக சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேலுவை ஆதரித்து, அக்கட்சியின் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், "பாஜகவும், திமுகவும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பி ஆக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி மணி கரூர் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை. தற்பொழுது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவதால் கண்ணீர் வடிக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகள் அவர் வீட்டுக்குள்ளே இருப்பது தான் நல்லது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் கரூரில் போட்டியிட்டால் வெற்றிபெற மாட்டோம் எனத் தெரிந்து கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். தகரப் பெட்டியுடன் கோவை சென்றதாகக் கூறும், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, கோவை தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை, மீண்டும் அவர் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டு வெறும் 30 சதவீத பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கி ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை ஏன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றாமல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.