தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்.26 சிலிண்டர் விநியோகம் இல்லை.. டெலிவரி மேன் சங்கத்தினர் கூறுவது என்ன? - CYLINDER DELIVERY MAN STRIKE

குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சிலிண்டர் டெலிவரி மேன்கள் சங்கத்தினர் வரும் அக்.26ம் தேதியன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் கோப்புப்படம்
சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 10:42 PM IST

சென்னை: தமிழகத்தில் வீடு, ஹோட்டல் என எங்கும் உணவு சமைப்பதற்கு எல்பிஜி சிலிண்டரையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வேளை சிலிண்டர் காலியாகி அடுத்த சிலிண்டர் வரவில்லை என்றால் இல்லதரசிகள் பெரும் சிரமம் அடைவார்கள்.

இந்த நிலையில், சிலிண்டர் டெலிவரி மேன்கள் வருகிற 26 ஆம் தேதி அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச போனஸ் தொகை 8.33% என்ற அடிப்படையில் 2024- ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ரூ.12,000 என ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச அகவிலைப்படி முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு சம்பளத்துடன் ஒரு நாள் வார விடுமுறை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

வருடத்திற்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருடத்திற்கு 12 நாட்கள் சம்பளத்துடன் மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருடத்திற்கு 12 நாட்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பு வழங்கப்பட வேண்டும். சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களுக்குள் உதவிகள், தற்காலிகம் என்கிற எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், மெக்கானிக், டிரைவர், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன்கள், அலுவலகப் பணியாளர் அனைவரையும் பணிமூப்பு அடிப்படையில் அந்தந்த கேஸ் ஏஜென்சியின் தொழிலாளர் பெயர்ப் பட்டியலில் சேர்த்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன், HP, பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் அனைத்து சிலிண்டர் டெலிவரி மேன்கள் வரும் அக் 26ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும், அடையாள வேலைநிறுத்தத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக" அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இ- சிகெரட்டுகள், ஐஃபோன்கள், தங்கம்..! சிக்கியது எப்படி?

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், "குறைந்தபட்ச ஊதியம் வழங்க முடியவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை வருகிற 26 ஆம் தேதி அறிவித்துள்ளோம்.

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அனைத்து தொழிற்சங்களுடன் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தமாக பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்போம். வேலைநிறுத்தம் செய்யும் தினத்தன்று வணிக சிலிண்டர் தீர்ந்து போனால் அன்றைய தினம் தர முடியாது.

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் சிலிண்டர் காலியானால் பாதிக்கப்படுவார்கள். மேலும், முக்கியமாக அன்றைய தினம் வரக்கூடிய கேஸ் கசிவு புகார் சரி செய்ய ஆட்கள் இல்லாமல் மக்களுக்கு பாதிப்படைவார்கள். 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details