வேலூர்:தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வேலூர் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
தகவலின் அடிப்படையில், பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் பள்ளிகொண்டா தோப்பு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சுநாத் திருமண மண்டபம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் சுற்றித் திரிவதைக் கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் பள்ளிகொண்டா அடுத்த கேமரான் பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் (25) மற்றும் கீழச்சூரைச் சேர்ந்த கார்த்தி (25) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து பள்ளிகொண்டா பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 150 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 4 டேபண்டடோல் (tapentadol) அட்டை போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து இருவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஒரே இரவில் 7 இடங்களில் செல்போன் பறிப்பு; அச்சத்தில் மக்கள்.. போலீசார் ஆக்ஷன் என்ன? - thoothukudi cell phone snatch