புகார் அளித்த சத்திய நாராயணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தென்காசி:கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் பூலி சேதுராஜா(85), இவர் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "தான் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டான் செவல் மன்னர் பூலித்தேவர் அவர்களின் வாரிசான கடைசி பட்டம் சூட்டப்பட்ட ஜமீன்தார் ராமசாமி பாண்டியன் என்பவரின் மகன். தனக்கு தன் தந்தை மூலம் எழுதப்பட்ட உயிலின் அடிப்படையில் நெல்கட்டான் செவல் கிராமத்தில் உள்ள சொத்துக்கள் போலி பத்திரங்கள் மூலம் போலி பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான போலி பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். மேலும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது நிலங்களை மீட்டுத்தர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மகன் சத்திய நாராயணன் கூறுகையில், "ஜமீன்தார் ராமசாமி பாண்டியனின் பூலி சேதுராஜா மட்டும்தான். உயிலில் உள்ள தங்களது சொத்துக்கள் அனைத்தையும் மாற்று நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர். தற்போது, அந்த பட்டா அனைத்தையும் ரத்து செய்து, சொத்துக்களை தங்களிடமே மீட்டுத்தர வேண்டும். பூலித்தேவரின் வாரிசுகளுக்கு நேரடியாக எந்தவித சலுகைகளும் இதுவரை கிடைக்கவில்லை.
அரண்மனையை அரசு கையகப்படுத்திய நிலையில், அதற்கான இழப்பீடு தொகையும் தற்போது வரை வழங்கப்படவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான வாரிசுகளுக்கு உரிய சலுகை எதுவும் தமிழக அரசால் வழங்கப்படவில்லை. தற்போது தனது குடும்பம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதால், தமிழக அரசு நில அபகரிப்பு குறித்த உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோவை அபேஸ் செய்த சிறுவன் உள்ளிட்ட 2 பேர் முதல் வழிப்பறி செய்தவர் கைது வரை - சென்னை குற்றச் செய்திகள்