திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த இளைஞர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், இருவரையும் தீவிரமாக விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் உண்மையைத் தெரிவித்துள்ளனர்.
அந்த விசாரணையில், இருவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பதும், திருப்பூருக்கு நண்பர்கள் மூலமாக கஞ்சா வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வாகனத்திலிருந்த பையைத் திறந்து பார்த்த பொழுது, அதில் கஞ்சாவுக்குப் பதிலாக மாட்டுச் சாணம் இருந்தது தெரியவந்தது.