கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்த் தொழிலாளியான ஐனூல் அன்சாரி என்பவரின் மகள் அப்சர் கத்தூன்(வயது 4) வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல் துறை தெரிவித்துள்ள முதற்கட்டத் தகவலின் படி, வால்பாறை காவல் நிலைய சரகம், ஊசிமலை மட்டம் வாழப்பாடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் கடந்த ஓராண்டாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐனூல் அன்சாரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதியில் இறப்பு நிகழ்வு என்பதால் தாய் - தந்தை இருவரும் வேலைக்கு செல்லவில்லை.
மதியம் சுமார் 1.30 மணியளவில் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி அப்சர் கத்தூன் என்பவரை தேயிலைத் தோட்ட புதரில் இருந்து வந்த சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. இதை பார்த்த அவரது தாய் சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்க்கும் போது சுமார் 700 மீட்டர் புதரில் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.